| நூல் | அகநானூறு |
| பாடல் | 005 - அளிநிலை பொறா |
| பாடியவர் | பெருங்கடுங்கோ |
| திணை | பாலை |
| துறை | பொருள்வயிற் பிரியக் கருதிய தலைமகன் தன் நெஞ்சிற்குச் சொல்லிச் செலவழுங்கியது |
அளிநிலை பொறாஅ தமரிய முகத்தள்
விளிநிலை கேளாள் தமியள் மென்மெல
நலமிகு சேவடி நிலம்வடுக் கொளாஅக்
குறுக வந்துதன் கூரெயிறு தோன்ற
வறிதகத் தெழுந்த வாயல் முறுவலள் (5)
கண்ணிய துணரா அளவை யொண்ணுதல்
வினைதலைப் படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையலங் காட்டுப்
பளிங்கத் தன்ன பல்காய் நெல்லி
மோட்டிரும் பாறை ஈட்டுவட் டேய்ப்ப (10)
உதிர்வன படூஉம் கதிர்தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகுநுனை தோற்றி
பாத்தியன்ன குடுமிக் கூர்ங்கல்
விரனுதி சிதைக்கும் நிரைநிலை அதர
பரன்முரம் பாகிய பயமில் கானம் (15)
இறப்ப எண்ணுதி ராயின் அறத்தா
றன்றென மொழிந்த தொன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்றுநினைந் தேற்றிப் (20)
பாவை மாய்த்த பனிநீர் நோக்கமொ
டாகத் தொடுக்கிய புதல்வன் புன்றலைத்
தூநீர் பயந்த துணையமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மாமலர்
மணியுரு இழந்த அணியழி தோற்றம் (25)
கண்டே கடிந்தனம் செலவே ஒண்தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும்நாம் எனினே. (28)
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
விளி நிலை கேளாள் தமியள் மெல் மெல
நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ
குறுக வந்து தன் கூர் எயிறு தோன்ற
வறிது அகத்து எழுந்த வாயல் முறுவலள் (5)
கண்ணியது உணரா அளவை ஒள் நுதல்
வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி
மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப (10)
உதிர்வன படூஉம் கதிர் தெறு கவாஅன்
மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல்
விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர
பரன் முரம்பு ஆகிய பயம் இல் கானம் (15)
இறப்ப எண்ணுதிர் ஆயின் அறத்து ஆறு
அன்று என மொழிந்த ஒன்றுபடு கிளவி
அன்ன வாக என்னுநள் போல
முன்னம் காட்டி முகத்தின் உரையா
ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி (20)
பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத்
தூ நீர் பயந்த துணை அமை பிணையல்
மோயினள் உயிர்த்த காலை மா மலர்
மணி உரு இழந்த அணி அழி தோற்றம் (25)
கண்டே கடிந்தனம் செலவே ஒண் தொடி
உழையம் ஆகவும் இனைவோள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே. (28)
அளி நிலை பொறாஅது அமரிய முகத்தள்
அளி - அன்பு; நிலை - தன்மை; பொறாஅது - தாங்கமாட்டாமல்; அமரிய - சினந்த; முகத்தள் - முகத்தை உடையவள்;
தலைவன் வழக்கத்தை விட அதிகமாக அன்பு செலுத்த, அதை பொறுக்க முடியாத, கோபமான முகத்தையுடையவள்
விளி நிலை கேளாள் தமியள்
விளி - அழைக்கும் சத்தம்; நிலை - தன்மை; கேளாள் - கேட்காதவளாய்; தமியள் - தனிமையானவள்;
தலைவன் அழைக்கும் சத்தத்தை கேட்காமல், தனியாக (தூரத்தில்) நிற்பவள்
மெல் மெல நலம் மிகு சேவடி நிலம் வடுக் கொளாஅ குறுக வந்து
மெல் மெல - மெல்ல மெல்ல; நலம் மிகு - மென்மை மிகுந்த; சேவடி - சிவந்த அடிகள்; நிலம் - தரை; வடு - சுவடு / தழும்பு; கொளாஅ - கொள்ளாதபடி; குறுக வந்து - அருகில் வந்து;
மெல்ல மெல்ல, தன்னுடைய மென்மையான, சிவந்த பாதங்கள் தரையில் சுவடு கூட படாதபடி, தலைவன் அருகில் வந்து
தன் கூர் எயிறு தோன்ற வறிது அகத்து எழுந்த வாயல் முறுவலள்
தன் - தன்னுடைய; கூர் - கூர்மையான; எயிறு - பற்கள்; தோன்ற - தெரியும்படி; வறிது - மிகச் சிறிய; அகத்து - உள்ளத்தில்; எழுந்த - தோன்றிய; வாயல் - வாய் வழியாக; முறுவலள் - புன்னகை கொண்டவள்;
உள்ளிருக்கும் துயரத்தை மறைத்து, தன்னுடைய கூர்மையான பற்கள் தெரியும்படி, உதட்டளவில் போலியாகப் புன்னைகைப்பவள்.
கண்ணியது உணரா அளவை ஒள் நுதல் வினை தலைப்படுதல் செல்லா நினைவுடன்
கண்ணியது - கருதியது; உணரா - அறியாத; அளவை - சமயம்; ஒள் - ஒளிமிக்க; நுதல் - நெற்றி; வினை - செயல் (பொருள் ஈட்டும் பயணம்); தலைப்படுதல் - மேற்கொள்ளுதல்; செல்லா - முடியாத; நினைவுடன் - எண்ணத்துடன்;
தலைவன் பொருள் ஈட்டுவதற்காக பிரிந்து செல்ல எண்ணியதை, தலைவி உணரும் முன்பே, ஒளி மிகுந்த நெற்றியுடைய அவளை பிரிந்து செல்ல முடியாத நினைவுடன்
முளிந்த ஓமை முதையல் அம் காட்டு
முளிந்த - உலர்ந்த; ஓமை - ஓமை மரம்; முதையல் - பழைய; அம் - அந்த; காட்டு - காடு;
காய்ந்த ஓமை மரங்கள் அடர்ந்த அந்த பழைய காட்டில்
பளிங்கத்து அன்ன பல் காய் நெல்லி மோட்டு இரும் பாறை ஈட்டு வட்டு ஏய்ப்ப உதிர்வன
பளிங்கத்து அன்ன - பளிங்கு போன்ற; பல் - பல; காய் நெல்லி - நெல்லிக்காய்; மோட்டு - மேடான; இரும் பாறை - பெரிய / கரிய பாறை; ஈட்டு - சேர்த்த; வட்டு - சூதாடும் உருண்டைகள்; ஏய்ப்ப - போல; உதிர்வன - உதிர்வனவாக;
பளிங்கு போன்ற நெல்லிக்காய்கள், பெரிய பாறையின் மேல் சூதாடும் உருண்டைகள் போல், உதிர்ந்து கிடக்க
படூஉம் கதிர் தெறு கவாஅன் மாய்த்த போல மழுகு நுனை தோற்றி
படூஉம் - படும்; கதிர் - சூரியக் கதிர்; தெறு - சுடுகின்ற; கவாஅன் - மலைப்பக்கம்; மாய்த்த - வெட்டிய; மழுகு - கோடாரி; நுனை - முனை; தோற்றி - தோன்றுவது;
தகிக்கும் சூரியன் சுடுகின்ற மலைப்பக்கம், வெட்டிய கோடாரி முனை போல் தோன்ற
பாத்தி அன்ன குடுமிக் கூர்ம் கல் விரல் நுதி சிதைக்கும் நிரை நிலை அதர பரன் முரம்பு ஆகிய பயம் இல் கானம் இறப்ப எண்ணுதிர்
பாத்தி அன்ன - வயல்வெளிகளில் கட்டிய வரப்பு மேடு போல; குடுமி கூர்ம் கல் - கூர்மையான மேல்பாகத்தை கொண்ட கற்கள்; விரல் - கால் விரல்; நுதி - நுனி; சிதைக்கும் - சிதைக்கின்ற; நிரை - வரிசையான; நிலை - நிலம் / அமைப்பு; அதர - வழியினை உடைய; பரன் - மேடு; முரம்பு - பருக்கைக்கல் நிலம்; ஆகிய - ஆகிய; பயம் இல் கானம் - பலன் இல்லாத காடு; இறப்ப - கடந்து செல்ல; எண்ணுதிர் - நினைப்பீர்;
கால் விரல் நுனியை சிதைக்கின்ற, வரப்புப்மேட்டைப் போல் கூர்மையான கற்கள் வரிசையாக நிறைந்த, பருக்கைக்கற்கள் நிரம்பிய மேட்டுநிலமுள்ள, ஒரு பயனுமில்லாத காட்டை கடந்து செல்ல நினைப்பீர்.
ஆயின் அறத்து ஆறு அன்று என மொழிந்த ஒன்றுபடு கிளவி அன்ன வாக என்னுநள் போல முன்னம் காட்டி
ஆயின் - ஆனால்; அறத்து - தர்மத்தின் (இல்லற தர்மத்தின்); ஆறு - வழி; அன்று என - இல்லை என்று; மொழிந்த - சொல்லப்பட்ட; ஒன்றுபடு - பொருத்தமான; கிளவி - வார்த்தை / அறிவுரை; அன்ன - போன்ற; வாக - ஆக; என்னுநள் போல - நினைப்பவள் போல; முன்னம் காட்டி - குறிப்பு காண்பித்து;
ஆனால், “நீங்கள் பிரிந்து செல்வது, இல்லற தர்மத்தின் வழி இல்லை” என்று சொல்லப்பட்ட அறிவுரையை, குறிப்பால் உணர்த்துவது போல
முகத்தின் உரையா ஓவச் செய்தியின் ஒன்று நினைந்து ஏற்றி பாவை மாய்த்த பனி நீர் நோக்கமொடு
முகத்தின் - முகத்தினால்; உரையா - பேசாமல்; ஓவச் - ஓவியம்; செய்தியின் - தன்மையுடன்; ஒன்று - ஒன்றை; நினைந்து - எண்ணி; ஏற்றி - கொண்டு; பாவை - கண் பாவை; மாய்த்த - மறைத்த; பனி - கண்ணீர்; நீர் - நீர்; நோக்கமொடு - பார்வையுடன்;
முகத்தினால் பேசாமல் (அதாவது வார்த்தைகளால் பேசாமல்), கருவிழியை மறைக்கும் அளவுக்கு கண்ணீர் நிறைந்த பார்வையுடன், ஒரு ஓவியம் போல தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்
ஆகத்து ஒடுக்கிய புதல்வன் புன் தலைத் தூ நீர் பயந்த துணை அமை பிணையல் மோயினள்
ஆகத்து - மார்பில்; ஒடுக்கிய - அணைத்த; புதல்வன் - மகன்; புன் தலை - மென்மையான / சிறிய தலை; தூ நீர் பயந்த - தூய்மையான அழகு தந்த; துணை அமை - இணை பொருந்திய; பிணையல் - மாலை; மோயினள் - மோந்து பார்த்தாள்;
தன் மார்பில் அணைத்த மகனின், மென்மையான தலையில், அவன் அழகுக்கு இணையாக சூடியிருந்த மாலையை, முகர்ந்து பொழுது
உயிர்த்த காலை மா மலர் மணி உரு இழந்த அணி அழி தோற்றம்
உயிர்த்த - பூத்த; காலை - பொழுது; மா மலர் - பெரிய பூ; மணி - நீலமணி போன்ற; உரு - நிறம்; இழந்த - நீங்கிய; அணி - அழகு; அழி - சிதைந்த; தோற்றம் - காட்சி;
காலையில் பூத்த நீலமணி போன்ற பெரிய மலர்கள், (தலைவியின் பெருமூச்சு பட்டவுடன்) அழகு சிதைந்து வாடிய காட்சியை
கண்டே கடிந்தனம் செலவே
கண்டே - பார்த்தவுடனேயே; கடிந்தனம் - தடுத்தோம்; செலவே - பயணத்தை;
தவிர்த்தோம், பொருள் தேடச் சொல்லும் பயணத்தை
ஒண் தொடி உழையம் ஆகவும் இனைவோள்
ஒண் - ஒளிமிக்க; தொடி - வளையல்; உழையம் - அருகிலேயே; ஆகவும் - இருந்தும்; இனைவோள் - வருந்துபவள்;
பிரகாசமான வளையல்களை அணிந்தவள், நான் அருகிலேயே இருக்கும்போதே இவ்வளவு வருந்துபவள்
பிழையலள் மாதோ பிரிதும் நாம் எனினே
பிழையலள் - உயிர் வாழமாட்டாள்; மாதோ - அசைச்சொல்; பிரிதும் - பிரிவோம்; நாம் - நாம்; எனினே - என்றால்.
நான் உண்மையாகவே பிரிந்து சென்றால் உயிர் பிழைக்கமாட்டாள்
தலைவன் வழக்கத்தை விட அதிகமாக அன்பு செலுத்த, அதை பொறுக்க முடியாத, கோபமான முகத்தையுடையவள்.
தலைவன் அழைக்கும் சத்தத்தை கேட்காமல், தனியாக (தூரத்தில்) நிற்பவள்.
மெல்ல மெல்ல, தன்னுடைய மென்மையான, சிவந்த பாதங்கள் தரையில் சுவடு கூட படாதபடி, தலைவன் அருகில் வந்து, உள்ளிருக்கும் துயரத்தை மறைத்து, தன்னுடைய கூர்மையான பற்கள் தெரியும்படி, உதட்டளவில் போலியாகப் புன்னைகைப்பவள்.
தலைவன் பொருள் ஈட்டுவதற்காக பிரிந்து செல்ல எண்ணியதை, தலைவி உணரும் முன்பே, ஒளி மிகுந்த நெற்றியுடைய அவளை பிரிந்து செல்ல முடியாத நினைவுடன் -
காய்ந்த ஓமை மரங்கள் அடர்ந்த அந்த பழைய காட்டில், பளிங்கு போன்ற நெல்லிக்காய்கள், பெரிய பாறையின் மேல் சூதாடும் உருண்டைகள் போல், உதிர்ந்து கிடக்க, தகிக்கும் சூரியன் சுடுகின்ற மலைப்பக்கம், வெட்டிய கோடாரி முனை போல் தோன்ற, கால் விரல் நுனியை சிதைக்கின்ற, வரப்புப்மேட்டைப் போல் கூர்மையான கற்கள் வரிசையாக நிறைந்த, பருக்கைக்கற்கள் நிரம்பிய மேட்டுநிலமுள்ள, ஒரு பயனுமில்லாத காட்டை கடந்து செல்ல நினைப்பீர்.
ஆனால், “நீங்கள் பிரிந்து செல்வது, இல்லற தர்மத்தின் வழி இல்லை” என்று சொல்லப்பட்ட அறிவுரையை, குறிப்பால் உணர்த்துவது போல, முகத்தினால் பேசாமல் (அதாவது வார்த்தைகளால் பேசாமல்), கருவிழியை மறைக்கும் அளவுக்கு கண்ணீர் நிறைந்த பார்வையுடன், ஒரு ஓவியம் போல தன் உணர்வுகளை வெளிப்படுத்துகிறாள்.
தன் மார்பில் அணைத்த மகனின், மென்மையான தலையில், அவன் அழகுக்கு இணையாக சூடியிருந்த மாலையை, முகர்ந்து பொழுது, காலையில் பூத்த நீலமணி போன்ற பெரிய மலர்கள், (தலைவியின் பெருமூச்சு பட்டவுடன்) அழகு சிதைந்து வாடிய காட்சியை பார்த்தவுடனேயே தவிர்த்தோம், பொருள் தேடச் சொல்லும் பயணத்தை.
பிரகாசமான வளையல்களை அணிந்தவள், நான் அருகிலேயே இருக்கும்போதே இவ்வளவு வருந்துபவள், நான் உண்மையாகவே பிரிந்து சென்றால் உயிர் பிழைக்கமாட்டாள்
தலைவி ஒரு வார்த்தை கூட பேசாமல், தன் உணர்ச்சிகளை தலைவனுக்கு வெளிப்படுத்தி, அவனுடைய பயணத்தை அவனே தவிர்க்கும்படி செய்கிறாள். கல் தோன்றி மண் தோன்றா காலத்திலிருந்தே இது தான் வழக்கம் - சிறப்பு :)
வழக்கம் போல், பாலை நிலத்தை பற்றிய விவரிப்புகள்.
எனக்கு பிடித்த இரண்டு சொல்லாடல்கள் இதோ:
ஓவச் செய்தி (ஓவியத்தின் செய்தி) - பிரிவுணர்த்த சொற்கள் தேவையில்லை; அவள் முகமே ஆயிரமாயிரம் செய்திகளை ஒரு ஓவியம் போல் குறிப்பால் உணர்த்தும். எனக்கு மிகவும் பிடித்த உவமை.
மகனின் மாலையை முகர்தல் - தன் மகன் அணிந்துள்ள மாலையை முகர்ந்தவுடன், அவள் பெருமூச்சு பட்டு, அந்த பூக்கள் வாடி போகின்றன. இதை பார்த்தவுடனே தலைவன் தன்னுடைய பயணத்தை தவிர்க்கிறான். தலைவன், தலைவி, பயணம், பிரிவு என எதற்கும் சம்மந்தமில்லாத ஒரு செயலை செய்து, அதன் மூலம் தலைவனுக்கு குறிப்பால் உணர்த்துகிறாள் (ஓவியச் செய்தி).
முகப்பு > அகநானூறுஅகநானூறு உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து மற்ற பாடல்களை பெற: