சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


தேசபற்று

24 Feb 2010

என் தாயின் கருவறையில்
கோடுகள் கிழித்து ரணமாக்கிவிட்டு
பெயர் வைத்தார்கள்
தேசபற்று

பெற்ற குழந்தை பசியில் அழும்போதும்
காவல் நாய்க்கு சோற்றை வைக்கும் கடமை
தேசபற்று

மொத்தமும் நமக்காக இருக்கும்போது
மிச்சதுக்காக அடித்துக்கொள்ளும் அவலம்
தேசபற்று

ஒன்றாய் இருந்தோம் கருவறையில்
கிழித்து பிறந்தோம் விடுதலையில்
தாயின் இரத்தம் கணக்கில் இல்லை
பிள்ளைகளின் யுத்தம் முடியவில்லை

ஆயுதங்களாய் அழியும் செல்வத்தில்
பூமியில் சொர்க்கங்கள் படைக்கலாம்
குருதி சிந்தும் யுத்தங்களை
அன்பு சிந்தும் முத்தங்களாக்கலாம்

இரத்தம் தோய்ந்த எல்லைகோடுகளில்
பூக்காடுகள் வளர்ப்போம்
துப்பாக்கி சுமக்கும் இயந்திரங்களை
மனிதர்கள் ஆக்குவோம்

தேசங்களை துறப்போம், நேசங்களை வளர்ப்போம்
எல்லைகளை மறப்போம், விண்ணுலகில் பறப்போம்
புதிய உலகம் உருவாக, பிரளயங்கள் தேவையில்லை
தேசங்கள் தாண்டி காதல் செய்வோம்

நான் தமிழனல்ல
நான் இந்தியனல்ல
பட்டங்களை துறந்து
பாடி திரியும் பறவை நான்

என்னோடு வாருங்கள்

பறந்து திரியலாம்
சிரித்து மகிழலாம்
ஆனந்தமாய் வாழலாம்
நிம்மதியாய் இறக்கலாம்


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.