சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


போதுமடி மீனாட்சி

03 Sep 2026

தெனவெடுத்த தோளிருக்கு
பகையறுத்த வாளிருக்கு
குலங்காக்கும் மன்னவனா
உலகாள மதியிருக்கு

காதலிச்ச நெனைப்பிருக்கு
கருவறையா இருந்திருக்கு
தேகந்தொட்ட நேரமெல்லாம்
கவிதைகளா உறைஞ்சிருக்கு

ஆத்துமணல் மேடிருக்கு
அழகான கூடிருக்கு
தாயவளத் தேடுமொரு
சின்னஞ்சிறு பேடிருக்கு

வேறென்ன வேணுமடி
மீனாட்சி உனக்கு ?
சொல்லிவிட்டு போயிருந்தா
போதுமடி எனக்கு !

நூலறுந்த காத்தாடி
மேடையில்லா கூத்தாடி
காடுள்ள மிருகத்துக்கு
காதலொரு சாக்காடி?

கொண்டவளும் கூடயில்ல
கூடிப்பேச யாருமில்ல
சொந்தமில்லா ஊருக்குள்ள
நிக்குதிந்த தேரு புள்ள

தன்னந்தனியாக நின்னு
தவிச்சிருந்த நாளுமுண்டு
போறப்பாதை தெரியாம
உடைஞ்சிருந்த நேரமுண்டு

காட்டருவி சாரலில
பூத்திருக்கும் பூவப்போல
பகடிக்கதை வாழ்க்கையில
மகளவள பாக்குறப்ப

அத்தனையும் மறக்குதடி
அடிமனசு பறக்குதடி
இப்பொழுதே வாழ்க்கையென
நிம்மதியாய் இருக்குதடி

போதுமடி மீனாட்சி,
இது -
போதுமடி மீனாட்சி !


பொருள் விளக்கம்:


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.