அகநானூறு - இருங்கழி முதலை

27 Sep 2025

முகப்பு >  வலைப்பதிவுகள்

இருங்கழி முதலை மேஎந்தோ லன்ன
கருங்கா லோமைக் காண்பிற் பெருஞ்சினைக்
கடியுடை நனந்தலை யீன்றிளைப் பட்ட
கொடுவாய்ப் பேடைக் கல்கிரை தரீஇய
மான்றுவேட் டெழுந்த செஞ்செவி யெருவை (5)

வான்றோய் சிமைய விறல்வரைக் கவாஅற்
றுளங்குநடை மரையா வலம்படத் தொலைச்சி
யொண்செங் குருதி யுவறியுண் டருந்துபு
புலவுப்புலி துறந்த கலவுக்கழி கடுமுடை
கொள்ளை மாந்தரி னானாது கவரும் (10)

புல்லிலை மராஅத்த வகன்சே ணத்தங்
கலந்தர லுள்ளமொடு கழியக் காட்டிப்
பின்னின்று துரக்கு நெஞ்ச நின்வா
வாய்போற் பொய்ம்மொழி யெவ்வமென் களைமா
கவிரித ழன்ன காண்பின் செவ்வா (15)

யந்தீங் கிளவி யாயிழை மடந்தை
கொடுங்குழைக் கமர்த்த நோக்க
நெடுஞ்சே ணாரிடை விலங்கு ஞான்றே. (18)

படி 1: சொற்களை பிரித்து எழுதுவோம்

இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன
கருங்கால் ஓமை காண்பின் பெரும் சினை
கடிஉடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட
கொடுவாய் பேடைக்கு அல்கிரை தரீஇய
மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை (5)

வான் தொய் சிமை விறல்வரைக் காவல் அற்
உளங்கு நடை மரை ஆ வலம்பட தொலைச்சி
ஒள் செம் குருதி உவறி உண்டு அருந்துபு
புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை
கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும் (10)

புல் இலை மரா அத்த அகல் சேண் அத்தம்
கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்
பின் நின்று துரக்கு நெஞ்ச நின் வா
வாய் போல் பொய் மொழி எவ்வம் என் களைமா
கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வா (15)

அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை
கொடும் குழைக்கு அமர்த்த நோக்க
நெடும் சேண் ஆர் இடை விலங்கு ஞான்றே. (18)

படி 2: சொற்களின் அர்த்தத்தை புரிந்து கொள்வோம்

இருங்கழி முதலை மேஎந்தோல் அன்ன

இருங்கழி - (இரு + கழி) - இரண்டு பெரிய உப்பளங்கள்; மேஎம் தோல் - (மேல் + தோல்) - உடம்பின் தோல்; அன்ன - போன்ற;

பெரிய உப்பளங்களில் வாழும் முதலையின் மேல் தோலை போன்ற

கருங்கால் ஓமை காண்பின் பெரும் சினை

கருங்கால் - (கருமை + கால்) - கருத்த கால்களை போன்ற அடிமரத்தையுடைய; ஓமை - ஓமை மரம். உகாமரம் என்று அழைக்கப்படும் ஒரு பாலைவன மரம்; காண்பின் - காணும் + பின், கண்டால்; பெரும் சினை - (பெரிய + சினை) - பெரிய கிளை;

கருத்த அடிமரத்தையுடைய ஓமை மரத்தை கண்டால், பெரிய கிளையில்

கடிஉடை நனந்தலை ஈன்று இளைப்பட்ட

கடி உடை - (கடி + உடை) - காவல் உடைய, பாதுகாப்பான; நனம் தலை - (நனம் + தலை) - அகன்ற இடம்; ஈன்று - குஞ்சு பொரித்து; இளைப்பட்ட - (இளைப்பு + பட்ட) - சோர்வடைந்த

பாதுகாப்பான, அகன்ற இடத்தில் குஞ்சு பொரித்து சோர்வடைந்திருந்த

கொடுவாய் பேடைக்கு அல்கிரை தரீஇய

கொடு வாய் - (கொடுமை + வாய்) - வளைந்த அலகினையுடைய; பேடைக்கு - பெண் பறவைக்கு; அல்கிரை - (அல் + இரை) - தகுந்த உணவு; தரீஇய - (தர) - கொடுப்பதற்காக;

வளைந்த அலகினையுடைய பெண் பறவைக்கு தகுந்த உணவு கொடுப்பதற்காக

மான்று வேட்டு எழுந்த செஞ்செவி எருவை

மான்று - இருளோடு கலந்து, இருட்டிக்கொண்டு. மாலை நேரம்; வேட்டு - வேட்டைக்கு; எழுந்த - புறப்பட்ட; செஞ்செவி - (செம்மை + செவி) - சிவந்த காதுகளையுடைய; எருவை - ஆண் கழுகு;

மாலை நேரத்தில் வேட்டைக்கு புறப்பட்ட சிவந்த காதுகளையுடைய ஆண் கழுகு

வான் தொய் சிமை விறல்வரைக் காவல் அற்

வான் தோய் - (வானம் + தோய்) - வானத்தைத் தொடும்; சிமைய - சிகரத்தையுடைய; விறல் வரை - (விறல் + வரை) - பெரிய மலையின்; கவாஅன் - (கவான்) - மலைப்பக்கத்தில்;

வானத்தைத் தொடும் சிகரத்தையுடைய பெரிய மலையின் பக்கத்தில்

உளங்கு நடை மரை ஆ வலம்பட தொலைச்சி

துளங்கு நடை - அசைந்த நடையையுடைய; மரையா - மரைமான். தமிழகத்தில் இருந்த ஒருவகை மான் இனம்; வலம் பட - வெற்றி கொண்டு; தொலைச்சி - கொன்று

அசைந்த நடையையுடைய மரைமானை வெற்றிகொண்டு கொன்று

ஒள் செம் குருதி உவறி உண்டு அருந்துபு

ஒள் செம் குருதி - (ஒண்மை + செம்மை + குருதி) - ஒளிமிக்க சிவந்த இரத்தம்; உவறி - மேலெழுந்து வழிய; உண்டு - குடித்து; அருந்துபு - (அருந்தி) - உண்டு;

அதன் ஒளிமிக்க சிவந்த இரத்தம் மேலெழுந்து வழியும் போது, அதை உண்டு குடிக்கும்

புலவு புலி துறந்த கலவு கழி கடு முடை

புலவு புலி - புலால் நாற்றமுடைய புலி; துறந்த - விட்டுப்போன; கலவு கழி - தசைகள் நீக்கப்பட்ட; கடு முடை - மிகுந்த நாற்றமுடைய;

புலால் நாற்றமுடைய புலி விட்டுப்போன தசைகள் இல்லாத மிகுந்த நாற்றமுடைய (அழுகிய உடல் என கொள்ளலாம்)

கொள்ளை மாந்தரின் ஆனாது கவரும்

கொள்ளை மாந்தரின் - கள்வரைப் போல; ஆனாது - இடைவிடாமல்; கவரும் - கவர்ந்து உண்ணும்;

கள்வரைப் போல இடைவிடாமல் கவர்ந்து உண்ணும்

புல் இலை மரா அத்த அகல் சேண் அத்தம்

புல் இலை - சிறிய இலைகளையுடைய; மரா அத்த - மரா மரங்கள் நிறைந்த; அகல் சேண் - (அகன்ற + தொலைவு) - அகன்ற தொலைவான; அத்தம் - வழி (பாலை நில வழி என கொள்க);

சிறிய இலைகளையுடைய மரா மரங்கள் நிறைந்த அகன்ற தொலைவான பாலைநில வழியில்

கலந்தரல் உள்ளமொடு கழியக் காட்டிப்

கலந்தரல் உள்ளமொடு - கலக்கம் தரும் உள்ளத்தோடு; கழிய - கடந்து செல்லும்படி; காட்டி - வழிகாட்டி;

கலக்கம் தரும் உள்ளத்தோடு கடந்து செல்லும்படி வழிகாட்டி

பின் நின்று துரக்கு நெஞ்ச நின் வா

பின் நின்று - பின்னால் நின்று; துரக்கும் - செலுத்துகின்ற; நெஞ்ச - நெஞ்சமே; நின் - உன்னுடைய; வா - வாழ்வாயாக (வாழ்த்துப் பொருள் தரும் அசைநிலை);

பின்னால் நின்று செலுத்துகின்ற நெஞ்சமே, உன்னுடைய

வாய் போல் பொய் மொழி எவ்வம் என் களைமா

வாய் போல் பொய் மொழி - வாய்மை போன்ற பொய்மையான மொழிகள்; எவ்வம் - துன்பத்தை; என் - என்னுடைய; களைமா - நீக்குமா;

வாய்மை போன்ற பொய்மையான மொழிகள், என்னுடைய துன்பத்தை நீக்குமா?

கவிர் இதழ் அன்ன காண்பின் செவ்வா

கவிர் இதழ் அன்ன - முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற; காண்பின் - தோற்றத்தையுடைய; செவ் வாய் - சிவந்த வாய்;

முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற தோற்றத்தையுடைய சிவந்த வாயின்

அம் தீம் கிளவி ஆய் இழை மடந்தை

அம் தீம் கிளவி - (அழகிய + இனிய + சொல்) - அழகிய இனிய சொற்களும்; ஆய் இழை - ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த; மடந்தை - பெண்;

அழகிய இனிய சொற்களும், ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணின்

கொடும் குழைக்கு அமர்த்த நோக்க

கொடும் குழைக்கு - வளைந்த காதணிக்கு; அமர்த்த - ஒத்த ; நோக்கு - பார்வை;

வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை

நெடும் சேண் ஆர் இடை விலங்கு ஞான்றே.

நெடும் சேண் - (நெடிய + தொலைவு) - நீண்ட தொலைவையுடைய; ஆர் இடை - அருமையான வழியில்; விலங்கும் ஞான்றே - குறுக்கிடும் பொழுதில்;

அந்த நீண்ட தொலைவையுடைய அருமையான வழியில் குறுக்கிடும் பொழுதில்?

படி 3: பாடலின் பொருள் மட்டும் - எளிமையாக

பெரிய உப்பளங்களில் வாழும் முதலையின் மேல் தோலை போன்ற கருத்த அடிமரத்தையுடைய ஓமை மரத்தை கண்டால், பெரிய கிளையில் பாதுகாப்பான, அகன்ற இடத்தில் குஞ்சு பொரித்து சோர்வடைந்திருந்த, வளைந்த அலகினையுடைய பெண் பறவைக்கு தகுந்த உணவு கொடுப்பதற்காக மாலை நேரத்தில் வேட்டைக்கு புறப்பட்ட சிவந்த காதுகளையுடைய ஆண் கழுகானது - வானத்தைத் தொடும் சிகரத்தையுடைய பெரிய மலையின் பக்கத்தில், அசைந்த நடையையுடைய மரைமானை வெற்றிகொண்டு கொன்று, அதன் ஒளிமிக்க சிவந்த இரத்தம் மேலெழுந்து வழியும் போது, அதை உண்டு குடிக்கும் புலால் நாற்றமுடைய புலி, விட்டுப்போன தசைகள் இல்லாத மிகுந்த நாற்றமுடைய அழுகிய உடலை, கள்வரைப் போல இடைவிடாமல் கவர்ந்து உண்ணும்.

சிறிய இலைகளையுடைய மரா மரங்கள் நிறைந்த அகன்ற தொலைவான பாலைநில வழியில், கலக்கம் தரும் உள்ளத்தோடு கடந்து செல்லும்படி வழிகாட்டி பின்னால் நின்று செலுத்துகின்ற நெஞ்சமே, உன்னுடைய வாய்மை போன்ற பொய்மையான மொழிகள், என்னுடைய துன்பத்தை நீக்குமா?

முள்முருங்கைப்பூவின் இதழைப் போன்ற தோற்றத்தையுடைய சிவந்த வாயின் அழகிய இனிய சொற்களும், ஆராய்ந்து செய்யப்பட்ட அணிகலன்களை அணிந்த பெண்ணின் வளைந்த காதணிகளுடன் ஒத்து நிற்கும் பார்வை, அந்த நீண்ட தொலைவையுடைய அருமையான வழியில் குறுக்கிடும் பொழுதில்?

படி 4: பாடலை பற்றிய என் கருத்துக்கள்

தலைவனின் நெஞ்சம், தலைவிக்காக பொருள் சேர்க்க தொலைதூரம் போக சொல்கிறது. அப்படி அவன் போகும் போது, தலைவியின் அழகான சிவந்த வாயிலிருந்து வரும் சொற்களும், அவளுடைய காதணிக்கு இணையாக அசைந்தாடும் அவளுடைய பார்வையும் குறுக்கிடுகிறது (தலைவியை பற்றிய நினைவுகள்). அந்த நேரத்தில் பொருள் சேர்ப்பதற்காக தலைவன் நெஞ்சம் சொன்ன காரணங்கள் எல்லாம் தலைவனின் துன்பத்தை (தலைவியின் நினைவுகள் தரும் துன்பத்தை) நீக்குமா?

அவனை அவனே கேட்டுக்கொள்ளும் கேள்வி. இது மட்டும் தான் இந்த பாடலின் கருத்து. இது பாடலின் கடைசி பகுதியில் (11-ம் வரியில் இருந்து 18-ம் வரி வரை) சொல்லப்படுகிறது. பாடலின் முதல் பகுதி (முதல் 10 வரிகள்), பாலை நிலத்தின் விலங்குகள், பறவைகள், அவற்றின் வேட்டை முறைகள் முதலியவற்றை சொல்லுகிறது. பாலை நிலத்தை பற்றிய அருமையான குறிப்புகள். ஆனால் முதல் பகுதி பாடலுடன் ஒட்டவில்லை. இடைச்செருகல் போல தனியாக தெரிகிறது.

பாடல் விவரங்கள்

நூல் அகநானூறு
பாடல் 003 - இருங்கழி முதலை
பாடியவர் இளங்கீரனார்
திணை பாலை
துறை தலைவனின் நெஞ்சம் தலைவிக்காக பொருள் சேர்க்க தொலைதூரம் செல்ல சொல்லும் போது, தலைவன் தன் நெஞ்சிடம் சொல்லியது
முகப்பு >  வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach

copyleft @ 2009.