ஏன்? எதற்கு? எப்படி?
இவற்றை மீறி
எந்த கருத்தும் என் கருத்துடன் ஒன்றியதில்லை
காதல் எப்படி நுழைந்தது?
விடை தெரியவில்லையே, நீ கேட்டபோது
என் மனம் புரியவில்லையோ? நான் விழித்த போது
எப்படி சொல்வேன் உனக்கு?
கள்ளமில்லா பிள்ளை சிரிப்பில்
உள்ளம் கொள்ளை போனதடி
வெட்டி பேசும் வெள்ளை பேச்சில்
என் கர்வம் தோற்று போனதடி
சிரிக்கும் உன் கன்னக் குழியில்
என் வீரம் மடிந்து போனதடி
இனிக்கும் உன் வளை ஓசையில்
என் இதயம் நின்று போனதடி
எப்படி சொல்வேன் உனக்கு?
அறிவின் சிகரமல்ல நீ
அழகின் உச்சமல்ல நீ
கவி பாடும் குயில் அல்ல நீ
தமிழ் போற்றும் குறளல்ல நீ
பிறகேன் நீ?
தெரியவில்லை
எப்படி சொல்வேன் உனக்கு?
சொல்லி மறுத்திருந்தால், கொன்றிருப்பேன் இதயத்தை
சொல்லாமல் மறுத்ததால், தேடுகின்றேன் காதலை
காத்திருந்தேன் இருபத்தேழு வருடங்கள்
காத்திருப்பேன் எழுநூறு ஜென்மங்கள்
எப்படி சொல்வேன் உனக்கு?
ஜாதியும் மதமும் காரணமா?
நான் ஆதாம்
நீ ஏவாள்
ஜாதி மதத்திற்கு மூத்தவர்கள் நாம்
எப்படி சொல்வேன் உனக்கு?
மனதில் காதலுடன், இதழில் நட்புடன்
பழக என்னால் முடியவில்லை
சொல்லாமல் இருந்திருந்தால்
தினமென் செவிக்குள் உன் சிரிப்பொலி
சொல்லி முடித்ததால்
தனிமையில் என் கவி ஒலி
எப்படி சொல்வேன் உனக்கு?
நானும் கோவலன் தான்
கண்ணகி உனை காணும் வரை
மனம் அறிந்திருக்கவில்லை
தேவதையை காண்பேன் என்று
எப்படி சொல்வேன் உனக்கு?
என் பூமி அழகானது
நண்பர்கள் அதிகமானார்கள்
சொந்தங்கள் இனித்தது
ஆனால், மனதின் ஓரமொரு வெற்றிடம்
எப்படி சொல்வேன் உனக்கு?
நாம் வீசி விளையாடிய பனிக்கட்டிகள் சொல்லட்டும்
நாம் ஏறி களைத்த மலைகள் சொல்லட்டும்
உனக்கு மிகவும் பிடித்த பயணங்கள் சொல்லட்டும்
எதிரும் புதிருமாய் இருந்த தருணங்கள் சொல்லட்டும்
அதிகாலை பனித்துளிகள் உரக்க சொல்லட்டும்
உன் முகம் காட்டும் கண்ணாடி இனிக்க சொல்லட்டும்
கர்வமழிந்து உன் கூந்தலேறும் ரோஜாக்கள் சொல்லட்டும்
என் மனதை திருடிய உன் வளையல்கள் சொல்லட்டும்
பறந்து திரியும் சிட்டுக்குருவிகள் சொல்லட்டும்
நீ கொஞ்சி விளையாடும் நாய்குட்டி சொல்லட்டும்
உன் மனதை திருடிய வெண்ணிலா சொல்லட்டும்
காதணியாக தவமிருக்கும் நட்சத்திரங்கள் சொல்லட்டும்
என் காதலை
நான் எப்படி சொல்வேன் உனக்கு
என் காதலை?
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற: