மதிகெட்ட மானிடர்
13 Feb 2026
முகப்பு >
வலைப்பதிவு
இனங்கண்டு உறவாடி
குலங்கெடுக்க புறம்பேசும்
மதிகெட்ட மானிடருள் - எனை
நலங்கெட எறிந்ததேன்?
சொல்லடி சிவசக்தி!
மெய்வருடும் உறவுகளில்
பொய்யொழுகும் உறவுகளை
பகலிரவாய் பகுத்தறிய - என்
நுதலதின் ஒளியெங்கே?
சொல்லடி சிவசக்தி!
நெல்லென நினைத்த
புல்லினப் பிழைக்கு
மழையென்ன செய்யும்?
தீதென்றறிந்தும்
திளைத்ததிலுழலும்
மனமெங்கு உய்யும்?
சொல்லடி சிவசக்தி!
பொருள் விளக்கம்:
- இனங்கண்டு - இனம் + கண்டு. தங்களுக்கு ஆதாயம் தரக்கூடியவர்களை தேடிக் கண்டுபிடித்து.
- குலங்கெடுக்க - குலம் + கெடுக்க. பெயர், மரியாதை கெட்டு போகும்படி.
- புறம்பேசும் - ஒருவர் முன்னிலையில் புகழ்ந்து பேசிவிட்டு, அவர் இல்லாதபோது அவரைப் பற்றி மற்றவர்களிடம் அவதூறாகவோ அல்லது இழிவாகவோ பேசுவது.
- மெய்வருடும் - மெய் + வருடும். மெய் என்பது உண்மை. உண்மையான உறவுகள்.
- பொய்யொழுகும் - பொய் + ஒழுகும். பொய்கள் நிறைந்து வழியும் உறவுகள்.
- பகுத்தறிய - பகுத்து + அறிய. எது நல்லது, எது கெட்டது எனத் தெரிந்துகொள்ள.
- நுதலதின் - நுதல் + அதின். நுதல் என்பது நெற்றி.
- ஒளியெங்கே - ஒளி + எங்கே. ஒளி என்பது பார்வை. இங்கே நெற்றிக்கண்ணை குறிக்கிறது.
- புல்லினம் - புல் + இனம். நெற்பயிரோடு வளரும் தேவையற்ற களைகள்.
- தீதென்றறிந்தும் - தீது + என்று + அறிந்தும். கெட்டது என்று தெரிந்தும்.
- திளைத்ததிலுழலும் - திளைத்து + அதில் + உழலும்; அதிலேயே மூழ்கித் கிடப்பது.
- உய்யும் - உயர்வடையும்.
முகப்பு >
வலைப்பதிவு