பவளமல்லி பூத்திருக்கு

17 Sep 2025

முகப்பு >  வலைப்பதிவுகள்

பவளமல்லி பூத்திருக்கு
பாடுங்குயில் காத்திருக்கு
தேவியவள் தேகந்தொட
இளவெயிலும் வேர்த்திருக்கு

இரவொழிந்த காலையிலே
கண்விழிக்கும் வேளையிலே
தெம்மாங்கு பாடிக்கொண்டே
தோகை விரிக்கும் பூமயிலே

இடையர்க்குல இளமகளே
இடைசிறுத்த திருமகளே
நடைபழகிய நாள்தொட்டு
குணம் மாறா குலமகளே

குளநண்டு நடனமென்று
குழலதிலே விரல்களாட
வெண்காந்தள் பூக்களென்று
செந்தேனை வண்டு தேட

மழைத்துளியே மணியாடை
நீராட்ட ஒருவோடை
துகிலுரித்த சிறுபேடை
தேன்தெறித்த புதுவாடை

சூதறியா செவ்விதழில்
தீதறியா பொன்சிரிப்பில்
களங்கண்ட காவலனும்
கள்வனாக மாறிப்போக

நானோ…

தீயருகே தவித்திருந்தேன்
துணையின்றி தனித்திருந்தேன்
காலனவன் கால்கள் பற்றி
காலமுடிய காத்திருந்தேன்

கண்ணெதிரே தோன்றினாய்
காதல்கொள்ள ஏங்கினாய்
வார்தையேதும் இல்லாமலே
வாழ்வின்மொழி பேசினாய்

செஞ்சாந்து நானிடவோ
பூமஞ்சள் தான் தரவோ
ஒவ்வாத ஓருறவில்
ஒன்றாக உறைந்திடவோ

சொல்லடி சிவசக்தி !


பொருள் விளக்கம்:

முகப்பு >  வலைப்பதிவுகள்

இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach

copyleft @ 2009.