ஏனடி அழைத்தாய்?

01 Mar 2010

முகப்பு >  வலைப்பதிவு

ஏனடி அழைத்தாய்?
எனை ஏனடி அழைத்தாய்?

என் கவிதை தடாகத்தில்
அழகாய் பூத்திருந்தேன்
உன் பிம்பம் விழுமென
நீராய் காத்திருந்தேன்

கல்லெறிந்து போகிறாய்
கல் நெஞ்சக்காரியோ?
தெறித்த துளிகளும்
முத்துக்களாய் உனக்காக

ஏனடி அழைத்தாய்?
எனை ஏனடி அழைத்தாய்?

கார்மேகம் சூழ்ந்ததென
நெடுவனம் தான் வருந்துமோ?
பூந்தென்றல் வீசுதென
பூக்களும் தான் புலம்புமோ?

காதலன் கொஞ்சுகையில்
காதல்மனம் கெஞ்சுமோ?
இயற்கையின் விதி புரியாதோ?
காதலின் சதி தெரியாதோ?

ஏனடி அழைத்தாய்?
எனை ஏனடி அழைத்தாய்?

தொட்டியில் இருக்கும் மீன் நான்
கையில் எடுத்து கொஞ்சுகிறாய்
சுவாசமின்றி வாழும் கலையை
எனக்கு கற்று கொடுக்கிறாய்

துடிக்கும் போது இனிக்கும்
இனிக்கும் போது வலிக்கும்
வலிக்கும் போது சிரிக்கும்
விந்தையை நீ அறிவாயோ?

இல்லையென்று கேட்பதற்கு
இல்லாமலே போகலாம்
இதற்காகவா அழைத்தாய்?
எனை இதற்காகவா அழைத்தாய்?

ஆழ பதிந்து விட்டாய்
இனி மீள முடியாது
எனை இரண்டாய் பிளந்தாலும்
உன் நினைவு அகலாது

ஏனடி அழைத்தாய்?
எனை ஏனடி அழைத்தாய்?

முகப்பு >  வலைப்பதிவு

இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். தொடர்ந்து என்னுடைய பதிவுகளை பெற:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach

copyleft @ 2009.