சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
08 Sep 2026
எதுவும் எனதில்லை
எதுவும் உனதில்லை
ஏதும் நாமறியோம்
தீதும் நாம்புரியோம்
போவதும் வருவதும்
நம் வசமில்லை
நோவதும் சாவதும்
நம் கடனில்லை
வாழ்வாங்கு வாழவே
பூமிதனில் வந்தோமே
வாழ்விங்கே தீதெனில்
வானவனை கொல்வோமே !
கேளடா மானிடா …
நானென்றும் நீயென்றும்
நல்லவை இவைதானென்றும்
பாரினில் வகுத்தது யாரடா ? - அது
மானிடமொழிந்தவோர் போரடா !
உள்ளென்றும் வெளியென்றும்
ஊர்முடியும் வரம்பென்றும்
கோடுகள் கிழித்தது யாரடா ? - இது
உன்தாயின் கருவறை வீடடா !
வானென்றும் மண்ணென்றும்
உனையாளும் இறையென்றும்
போதனை செய்தது யாரடா ? - உன்
சிந்தையை கொண்டுநீ கேளடா !
பொறுத்தது போதும்,
கடவுளாகுங்கள் !
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: