சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி
22 Oct 2026
எழுதலாம் என்று முடிவெடுத்தப்பின், என்ன எழுதுவது என்று தெரியாமல் எதையோ எழுதிக்கொண்டிருந்தேன். அப்போது எங்கிருந்தோ ஒரு குரல்.
“அண்ணா”.
என்னைப் பாத்தா? எனக்கு தான் தங்கச்சி எதுவும் கிடையாதே. யாரு கூப்பிடுறா?
பால்கனியில் இருந்து எட்டிப் பார்த்தேன். யாருமில்லை. தூரத்தில் மலையும், மேகமும், மரங்களும், அதில் காக்கைகளும் எப்போதும் போல் அவைகளின் இயல்பில் இருந்தன. நான் மட்டும் என் இயல்பில் இல்லை. சில வருடங்களாகவே.
யாரோட குரல் அது? நல்ல குரல். “மாமா”, “மச்சான்”-னு கூப்பிட்டு இருந்தா நல்லா இருக்கும். ஆனா “அண்ணா”-னு கூப்பிடுதேன்னு ஒரு வருத்தம். பேயா இருந்தாலும், அது பொம்பளை பேயா இருக்கணும், அழகான இளவயசு பேயாக இருக்கனும், அதுவும் நம்மளை ஒரு மாதிரி நினைச்சு கூப்பிடணும். காலங்காலமா சினிமால இதுதானப்பா நடைமுறை? . சுந்தர் C-யோட எல்லா “அரண்மனை” படமும் பார்த்திருக்கேனே. இது ஏன் அண்ணா-னு கூப்பிடுது? ஒருவேளை டி.வி. சீரியல் பேயா இருக்குமோ? மாமியார் கொடுமையில செத்துப் போச்சா? நாம தான் டி.வி. சீரியல் எல்லாம் பாக்கறதில்லையே. சரி, திரும்பவும் கூப்பிடும் போது பேசிக்கலாம்.
“அண்ணா”
அடங்கொய்யாலே… நிஜமாவே கூப்பிடறா-டா.
“யாரும்மா நீ? உனக்கென்ன வேணும். என்னை எதுக்கு அண்ணா-னு கூப்பிடறே?”
“அண்ணா”
த்தா… கடுப்பை கிளப்பாத. இப்ப என்னடி வேணும் உனக்கு?
“அண்ணா”
சட்டென்று உலகம் உறைகிறது. வானில் பறவைகள், அசைகின்ற மரங்கள், நடக்கின்ற மனிதர்கள் - அத்தனையும் உறைகின்றது. மௌனம். அமைதி. மயான அமைதி. கண்கள் எதிரிலுள்ள சுவற்றை நிலைக்கொத்தி வெறிக்கின்றன. நினைவுகளற்ற நிலை. பயத்தின் முடிவில் மகிழ்ச்சியும், மகிழ்ச்சியின் முடிவில் பயமும் இருப்பது போலில்லாமல், பயமும் மகிழ்ச்சியும் ஒன்றாக இருக்கிறது.
என்ன நடக்குது? நான் கனவு கண்டுட்டு இருக்கிறேனா? கண்டிப்பா, நான் தூங்கிட்டு தான் இருக்கேன். பேய் அமுக்கும்-னு சொல்லுவாங்களே. இதுக்கு ஏதோ ஒரு பேர் இருக்கு. “Sleep Paralysis”. ஆங்… அதுதான். நல்ல வேளை, எங்கேயோ உயரமான இடத்துல இருந்து கீழ விழற மாதிரி இல்லாம, சுவத்தை பாத்துட்டு உட்கார்ந்து இருக்கிற மாதிரி கனவு. பரவாயில்லை.
ஆனா இது கனவு தானா? இவ்வளவு தெளிவா ஒரு கனவு கண்டதா ஞாபகம் இல்லையே. கனவுல இருக்கோம்-னு நாம கனவு கண்டுட்டு இருக்கறப்ப தெரியாது-ல. எனக்கு எல்லாமே தெரியுதே. என் உடம்பு எனக்கு தெரியுது. நான் உக்காந்துட்டு இருக்கிற சேர், எழுதுற பேனா, பேப்பர், பால்கனி, மலை, மரம், காக்கா. எல்லாம் தெளிவா தெரியுதே. எப்படி?
அப்ப இது நிஜமா தான் நடக்குதா? யாரோட குரல் அது? என்னை ஏன் அவ கூப்பிடறா?
இப்ப சத்தம் கேட்குது. ரோட்டுல போற வண்டிகளோட சத்தம். ஹாரன். எதுக்குதான் இப்படி அடிக்கிறானுங்களோ? கல்யாணமாகாத பசங்களா இருப்பாங்கன்னு நினைக்கிறேன்.
எனக்குள் நானே சிரிக்கிறேன். ஆனா பார்வை மட்டும் சுவற்றை விட்டு அசைக்க முடியவில்லை.
“அண்ணா”
ம்ம்ம்… புரிஞ்சிடுச்சி…
இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்: