சலனமில்லா பெருங்கூச்சல்
பிரேம்குமார் மாசிலாமணி


மானிடா

01 Oct 2026

கொன்றதையும் வெந்ததையும்
தின்றுவிட்டு மாண்டுபோக
மண்ணிலொரு வடிவெடுத்து
வந்தாயோடா மானிடா?

கண்டதையும் கொண்டதையும்
வாழ்க்கையென நம்பிக்கொண்டு
கண்ணிலொரு தேடலின்றி
திரிவாயோடா மானிடா?

தேகத்தையும் போகத்தையும்
வேதமென எண்ணிக்கொண்டு
காக்கைக்குருவி குளியல்போல
சிலிர்ப்பாயோடா மானிடா?

போவதையும் வருவதையும்
சாதகத்தின் சாபமென்று
ஊக்கமின்றி தூக்கமின்றி
உறைவாயோடா மானிடா?

வானிலொரு தேவனென்றும்
கீழிலொரு பூதமென்றும்
கூத்தாடியின் கூத்துக்கேட்டு
ஆடுவாயோடா மானிடா?

பிராமணென்றும் பறையனென்றும்
மாநிலம் ஈந்த மாந்தர்களை
மலட்டுமூளை கதைகள்கேட்டு
வகுத்தாயோடா மானிடா?

போதுமடா …

வெஞ்சினத்தை கண்டுவிடு
வெம்பியதை கேட்டுவிடு
உண்மையென்று உணர்ந்ததை
உலகுக்கு உரைத்துவிடு !


இந்த வலைப்பதிவை படித்ததற்கு நன்றி. இது உங்களை மகிழ்வித்து இருக்கும் அல்லது சிந்திக்க தூண்டியிருக்குமென நம்புகிறேன். உங்கள் எண்ணங்கள் மற்றும் கேள்விகளை பகிர்ந்துகொள்ள விரும்பினால்:


Home  |  Blog  |  வலைப்பதிவு  |  Coach
copyleft @ 2009.